சிறுமலையில் பலியான விவசாயி வெடி விபத்தில் இறந்தது உறுதி; பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை
சிறுமலையில் பலியான விவசாயி வெடி விபத்தில் இறந்தது உறுதி; பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை
ADDED : மார் 02, 2025 04:23 AM
திண்டுக்கல் : திண்டுக்கல், சிறுமலை 17-வது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே தனியார் தோட்டத்தில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது.
அதன் அருகில் இருந்த வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்ய முயன்ற போது வெடித்ததில், போலீஸ்காரர்கள் கார்த்தி, மணி, வனப்பாதுகாவலர் செல்வ ஆரோக்கியராஜ் காயமடைந்தனர்.
விசாரணையில், இறந்தவர் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சாபுஜான், 58, என, தெரியவந்தது. அவரின் மொபைல் போன் மூலம் போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்தன.
சாபு ஜான் மனைவியுடன் கோட்டயத்தில் வசித்து வந்தார். விவசாய வேலை பார்த்து வந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல், சிறுமலையில் மிளகு தோட்டத்தை குத்தகை எடுத்து நடத்தினார்.
குத்தகை முடிந்ததும் கோட்டயம் சென்ற சாபு ஜான், சில வாரங்களுக்கு முன் மீண்டும் சிறுமலையில் மாந்தோப்பு வாங்கி விவசாயம் செய்யப்போவதாக, 1.50 லட்சம் ரூபாயுடன் வந்துள்ளார்.
தனியார் விடுதியில் தங்கி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, சாபு ஜான் குடும்பத்தினர், கோட்டயத்தில் உள்ள தோட்டத்தில் கிணறு தோண்ட வெடிபொருட்கள் வாங்கி வரும்படி கூறி உள்ளனர்.
அதற்காக, திண்டுக்கல் வந்து வெடி பொருட்களை வாங்கிக் கொண்டு, சிறுமலை 17-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள தோட்டத்தில் வெடி பொருட்களை பரிசோதித்துள்ளார். அப்போது, அவை வெடித்ததில் அவர் இறந்தது தெரிந்தது.
தொடர்ந்து, சிறுமலை வந்த பயங்கரவாத தடுப்பு படை எஸ்.பி., ரமேஷ்கிருஷ்ணா தலைமையிலான போலீசார், உள்ளூர், கியூ பிரிவு போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.
சாபு ஜான் இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்டு, அங்கிருந்து சில தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர்.