அனைத்து பயிர்களுக்கும் உழவு மானியம் விவசாயிகள் கோரிக்கை
அனைத்து பயிர்களுக்கும் உழவு மானியம் விவசாயிகள் கோரிக்கை
ADDED : மார் 14, 2025 12:48 AM

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டும், உழவு மானியம் வழங்கப்படுகிறது. முன்பிருந்ததைப் போல அனைத்து பயிர்களையும் பயிரிடும் விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்க வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று, விவசாயி கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இணைந்து தான் உழவு மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறு, சிறு விவசாயிகள் என சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 1 ெஹக்டேரில் உழவு செய்தால் அந்த உழவுக்கான கருவி வாடகையில், 50 சதவீதத்தை அரசு பின்முனை (பேக் எண்ட்) மானியமாக வழங்கியது.
அதாவது உழவு செய்தபின் அதற்கான ரசீதை ஒப்படைத்தால் மானியம், எங்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது உழவு செய்வதை உற்சாகப்படுத்தியது.
இரண்டாண்டுகளாக தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறுதானிய பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மட்டுமே சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன.
நெல், காய்கறி, எண்ணெய் வித்து பயிரிடும் விவசாயிகளை கணக்கில் எடுக்கவில்லை. சிறுதானியம் பயிரிடும் குறு, சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் 1 ெஹக்டேருக்கு 2000 ரூபாய், 1 ஏக்கருக்கு 800 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
பிற பயிர்களை பயிரிடும் குறு, சிறு விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அரசு வழங்கும் சிறிதளவு மானியம் கூட எங்களது உற்பத்திச் செலவை குறைக்கும் என்பதால், அனைத்து பயிர்களுக்குமாக முன்பு போல திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வரும் வேளாண் பட் ஜெட்டில் இதற்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
-- நமது நிருபர் -