திட்டிக்குடியில் மர்ம பொருள் வெடித்து விவசாயி கை விரல்கள் துண்டிப்பு
திட்டிக்குடியில் மர்ம பொருள் வெடித்து விவசாயி கை விரல்கள் துண்டிப்பு
ADDED : மே 10, 2024 12:29 AM

திட்டக்குடி, மே 10-
திட்டக்குடி அருகே கீழே கிடந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில் விவசாயியின் கை விரல்கள் துண்டானது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு,64; விவசாயி. இவர், நேற்று மாலை 3:15 மணிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஏரிக்கரைக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, அங்குள்ள புளியமரத்தின் அடியில் ெவள்ளை நிறத்தில் பந்து போன்று கிடந்த மர்ம பொருளை கையில் எடுத்து பார்த்தபோது, அந்த மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அதில், செல்வராசுவின் வலது கையில் இரண்டு விரல்கள் துண்டானது. மேலும், மார்பில் படுகாயம் ஏற்பட்டது. உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், காட்டுப்பன்றிகளை விரட்ட பயன்படுத்தும் நாட்டு வெடி என்பது தெரிய வந்தது.
இந்த நாட்டு வெடியை வைத்தது யார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.