ADDED : மார் 12, 2025 11:38 PM
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும், 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தின்படி, ஆதார் போல ஒவ்வொரு விவசாயிக்கும், ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்பட உள்ளது.
ஆனால், விவசாயிகள் இந்த பதிவேற்றத்துக்கு ஆர்வம் காட்டுவதில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் குறித்த அனைத்து தகவல்களையும் சேமிக்க, ஒரு தளத்தை மத்திய அரசு துவங்க உள்ளது.
நிலம், பயிர், சலுகைகள், மானியங்கள், விவசாயி பயனடைந்த திட்டங்கள் உள்ளிட்ட விபரங்கள் பதியப்படும். இதற்கான பணி வேளாண்மை, தோட்டக்கலை, மக்கள் நலப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சி அலுவலகங்கள் மட்டுமல்லாது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் இந்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
வேளாண் துறையினர் கூறியதாவது:
'அக்ரி ஸ்டேக்' திட்டப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மானியங்களை தனித்துவ அடையாள எண் வாயிலாக மட்டுமே இனி பெற முடியும். ஆனால், விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை.
உதாரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 55,000 விவசாயிகள் உள்ளனர். இதுவரை, 60,000க்கும் குறைவானோரே பதிவு செய்துள்ளனர்.
பொது இடங்கள், விவசாயிகள் கூடுமிடங்கள் என, கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி பதிவேற்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது பொதுசேவை மையத்தின் வாயிலாகவும், பதிவேற்றம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பதிவு செய்தால் தான் அடுத்த ஆண்டிற்கான திட்டங்கள், சேவைகளை விவசாயிகள் பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.