சொர்ணவாரி நெல் பயிர் பாதிப்பு ஓராண்டாக விவசாயிகள் பரிதவிப்பு
சொர்ணவாரி நெல் பயிர் பாதிப்பு ஓராண்டாக விவசாயிகள் பரிதவிப்பு
ADDED : ஆக 16, 2024 12:54 AM
சென்னை:சொர்ணவாரி பட்டத்தில், நெல் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசிடம் இழப்பீடு கிடைக்காமல் ஓராண்டாக பரிதவிப்பில் உள்ளனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
இப்படி பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சொர்ணவாரி நெற்பயிர்கள், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடியும் பாதிக்கப்பட்டது.
பயிர் காப்பீடு செய்வதற்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. அதனால், குறுவை மற்றும் சொர்ணவாரி பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படவில்லை. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடுபொருள் மானியமாக இழப்பீடு வழங்கப்படும் என, மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக தெரிவிக்கப் பட்டது. பயிர் பாதித்த விவசாயிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றிற்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
அதிகாரிகளிடம் கேட்டால், அரசின் பரிசீலனையில் இருப்பதாக கூறுகின்றனர். அரசு உதவினால் தான், அடுத்த பருவ சாகுபடி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

