தந்தை, மகனிடம் போலீசார் நேருக்கு நேர் விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை
தந்தை, மகனிடம் போலீசார் நேருக்கு நேர் விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை
ADDED : ஆக 16, 2024 01:31 AM
சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோரிடம், நேருக்கு நேர் விசாரணை நடக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் போலீசார் காவலில் விசாரிக்கப்படுகின்றனர்.
இருவரிடமும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில், தனிப்படை அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது.
நேற்று தந்தை, மகன் ஆகியோரை நேருக்கு நேர் அமர வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, விதிகளை மீறி சிறையில் இருந்து, அஸ்வத்தாமன் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டது ஏன் என, நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, நான் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். ஆதாரங்களை காட்டியதும் மவுனம் சாதித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காடு பகுதியில், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விவகாரத்தில், உங்களுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் பிரச்னை இருந்ததா; இது தொடர்பாக, ஆம்ஸ்ட்ராங்கை அஸ்வத்தாமன் சந்தித்தது ஏன்?
அப்போது, அஸ்வத்தாமனிடம் மொபைல் போனை ஆம்ஸ்ட்ராங்கிடம் கொடுக்கச்சொல்லி என்ன பேசினீர்கள். இருவருக்கும் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது என, நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கும் மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட, காங்., நிர்வாகி ஜெயபிரகாஷை கடத்தி, துப்பாக்கி முனையில் அஸ்வத்தாமன் பணம் பறித்துள்ளார். இதற்கும் நீங்கள் தான் காரணமா என கேட்டதற்கும், நாகேந்திரன் மவுனமாக இருந்துள்ளார்.
அப்போது, இந்த சம்பவத்திற்கும், அப்பாவுக்கும் தொடர்பு இல்லை என, அஸ்வத்தாமன் பதில் அளித்துள்ளார். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் நாகேந்திரன் இருந்ததும், அஸ்வத்தாமன் ரவுடிகளை ஒருங்கிணைத்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

