பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் 'யு டியுப்' சேனலை மூட உத்தரவு
பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் 'யு டியுப்' சேனலை மூட உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 08:25 PM
சென்னை:சிறையில் உள்ள, 'யு டியுபர்' சவுக்கு சங்கர் நேர்காணலை ஒளிபரப்பியதாக கைதான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அவரது 'யு டியுப்' சேனலை மூட உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக அளித்த புகாரின் அடிப்படையில், 'யு டியுபர்' சங்கர் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய, 'யு டியுப்' சேனல் தலைமை நிர்வாகியும், பத்திரிகையாளருமான பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக, ஜெரால்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் மேகநாதன் ஆஜராகி, ''சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதை மீறி, தொடர்ந்து பேசி வருகிறார். அதனால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது,'' என, வாதிட்டார்.
பெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ''தன் பேச்சு சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, தற்போது தான் மனுதாரர் உணர்ந்துள்ளார். இனி ஒருபோதும் அப்படி பேச மாட்டார். அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிடவும் மாட்டார்,'' என்றார்.
இதையடுத்து, பெலிக்ஸ் ஜெரால்ட்டுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, அவர் நடத்தி வரும் 'யு டியுப்' சேனலை மூடும்படியும், சர்ச்சைக்குரிய வகையில் இனி பேட்டி அளிக்க மாட்டேன் என, விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
***