மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது அரசுக்கு கரும்புள்ளியாக அமையும்
மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது அரசுக்கு கரும்புள்ளியாக அமையும்
ADDED : செப் 11, 2024 02:05 AM
மன்னார்குடி:''மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது, அரசுக்கு கரும்புள்ளியாக அமையும்,'' என,மன்னார்குடி ஜீயர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், அவர் அளித்த பேட்டி:
மன்னார்குடியில், ஆண்டுதோறும், அரசு பள்ளிகளில் படித்து வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கி வருகிறோம். நடப்பு ஆண்டு, எழுதுபொருட்கள், நோட்டுப் புத்தகங்களை கொடுக்கச் சென்றபோது, மாவட்ட கல்வி அலுவலர் அனுமதியின்றி, 'அரசு பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் கொடுக்க அனுமதி இல்லை' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக, மாணவர்களுக்கு, நோட்டு புத்தகங்கள் வழங்கி வருகிறோம். இதை தடுப்பதில், ஏதோ உள்நோக்கம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், மகாவிஷ்ணு என்பவர் பள்ளி ஒன்றில் ஆன்மிக உரையாற்றினார். இதனால்தான், தனக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச எழுதுபொருட்கள் வழங்க அனுமதி வழங்கவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது.
கல்வி போதிப்பதில், ஜாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகள் பார்க்கக் கூடாது என, திருவள்ளுவர், அவ்வையார், ஷேக்ஸ்பியர் போன்றோர் கூறிய கருத்துகளை தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களின் இனம், மதம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது. பல பகுதிகளில் இருந்தும், வேளாங்கண்ணிக்கு, கிறிஸ்தவர்கள் தேர் இழுத்தும், சிலைகளை சுமந்தும் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இவர்கள், யாரிடம் அனுமதி பெற்று, தேர் இழுத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு அரசு தடை விதிக்கவில்லை. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு, அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதன் வாயிலாக, இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது. தற்போது நடைபெறும் ஆட்சியில், தைரியமாக நல்லதை செய்பவர்கள், நல்லதை பேசுபவர்கள் மீது வழக்கு போடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது மிகவும் தவறான ஒன்று. அவர், ஜாதி, மதம், சமயம் பற்றியோ, பிற மதங்கள் பற்றியோ, தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. அத்தகைய கருத்துகளை தெரிவித்து இருந்தால், மகாவிஷ்ணு மீது, நானே, வழக்கு தொடர வேண்டும் என தெரிவித்திருப்பேன். எனவே, மகாவிஷ்ணு மீது, தமிழக அரசு வழக்கு தொடுப்பது, அரசுக்கு கரும்புள்ளியாக அமையும். இவ்வாறு, மன்னார்குடி ஜீயர் கூறினார்.

