பணிகளை முடிக்காமல் ரூ.42 லட்சம் மோசடி திரைப்பட இயக்குனர் பார்த்திபன் புகார்
பணிகளை முடிக்காமல் ரூ.42 லட்சம் மோசடி திரைப்பட இயக்குனர் பார்த்திபன் புகார்
ADDED : ஜூலை 06, 2024 02:54 AM
கோவை:தமிழ் திரைப்பட இயக்குனர் பார்த்திபன் 'டீன்ஸ்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் படக்காட்சிகள் எடுத்து மேற்பார்வையிடும் பணியை கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஸ்டுடியோ உரிமையாளர் சிவப்பிரசாத்திடம் கடந்தாண்டு வழங்கியுள்ளார்.
பிப்.10 முதல் 20ம் தேதிக்குள் திரைப்பட காட்சிகளை எடுத்து, பணிகளை முடித்து தருவதாக சிவப்பிரசாத் உறுதியளித்துள்ளார்.
இப்பணிகளுக்கென 68 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இயக்குனர் பார்த்திபன் படப்பிடிப்பின் போது 42 லட்சம் ரூபாயை சிவப்பிரசாத்திடம் வழங்கியுள்ளார்.
ஆனால் குறித்த காலத்துக்குள் பணிகளை முடிக்காததால் மார்ச் 19ம் தேதி வரை படக்காட்சிகளை எடுத்து முடித்து தர சிவப்பிரசாத் கால அவகாசம் கேட்டுள்ளார்.
ஆனால் முக்கியமான பணிகளை மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்க இயலவில்லை என சிவப்பிரசாத் தெரிவித்துள்ளார். ஜூன் 4ம் தேதி பார்த்திபனிடம் மேலும் 88 லட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதற்கு பார்த்திபன் ஒப்புக்கொள்ளவில்லை. பணத்தை பெற்றுக்கொண்டு பணிகளை முடித்து தராமல் சிவப்பிரசாத் மோசடி செய்துவிட்டதாக சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் வாயிலாக கோவை ரேஸ் கோர்ஸ் போலீசாரிடம் நேற்று முன்தினம் பார்த்திபன் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்டுடியோ உரிமையாளர் சிவப்பிரசாத்திடம் கேட்டபோது, ''டீன்ஸ் திரைப்படத்துக்கு, 500க்கும் மேற்பட்ட காட்சிகளை படம் பிடிக்கும் பணியை கொடுத்திருந்தனர். கூடுதலாக 100க்கும் அதிகமான காட்சிகளை கொடுத்ததால் ஒப்புக்கொண்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க முடியவில்லை.
பணிகளை முடித்த பிறகு கால தாமதத்தை காரணம் காட்டி ஒப்புக்கொண்ட பணத்தை அவர்கள் தரவில்லை.
பணத்தை தராமல் படத்தை வெளியிட முயற்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கோர்ட்டில் சிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்'' என்றார்.