ADDED : ஜூலை 04, 2024 01:33 AM
சென்னை:'கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில், நான்கு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணத்துக்கு, பள்ளி நிர்வாகம் தான் காரணம்எனக் கூறி, ஜூலை 17ல் போராட்டம் நடந்தது. பின், திடீரென கலவரமாக மாறியது.
இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ரவிகுமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'விசாரணை முறையாக நடந்து வருகிறது. திருடப்பட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்கவை மீட்கப்பட்டு உள்ளன. நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நான்கு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி,கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மீட்குமாறு, விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
உத்தரவை மீறினால், பள்ளி நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும், நீதிபதி தெரிவித்தார்.