ADDED : ஆக 26, 2024 04:36 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில், செல்வம், 48, என்பவர் அனுமதியின்றி நாட்டு வெடி, பாறையை தகர்க்கும் வெடிகளையும் தயாரித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சின்னன், முனீஸ்வரன் ஆகிய இருவரும் வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, வெடிபொருட்கள் வெடித்ததில் இருவரும் உடல் சிதறி பலியானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி., முருகேசன், ஆர்.டி.ஓ., பால்பாண்டி, தாசில்தார் சரவணக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நத்தம் போலீசார் விசாரித்தனர்.
இந்த பட்டாசு ஆலையில், நேற்று முன்தினம் மதியம் 3:30 மணிக்கே வெடி விபத்து நடந்துள்ளது. இதன் உரிமையாளர், இறந்தவர்களின் சிதறி கிடந்த உடல் பாகங்களை சாக்கு மூடையில் கட்டி வைத்திருந்தார்.
இறந்தவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு, பணத்தைக் கொடுத்து பிரச்னை வெளியே தெரியாமல் இருக்க முயற்சி செய்துள்ளார். மேலும், வெடி விபத்தின் போது, தொழிலாளர்கள் பலர் ஆலையை விட்டு வெளியே ஓடியதால் உயிர் தப்பினர் என்றும் தெரியவந்துள்ளது. நத்தம் போலீசார், பட்டாசு ஆலை உரிமையாளரிடம் விசாரிக்கின்றனர்.
பலியான இருவருக்கும் நிவாரண நிதி தலா 3 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நடந்த வெடி விபத்தில், திருவாவடுதுறை கர்ணன், லட்சுமணன் உயிரிழந்தனர். இருவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி தலா, 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.