ADDED : செப் 07, 2024 07:04 PM
சென்னை:'இலங்கை கடற்படை கைது செய்துள்ள, 22 மீனவர்களை விடுவிக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் விசைப் படகு மீனவர்கள் சார்பில், நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், அ.தி.மு.க., பங்கேற்கும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர்; சிறை பிடிக்கப்படுகின்றனர். இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களை, கடந்த மாதம் 5ம் தேதி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இம்மாதம் 3ம் தேதி, இலங்கை நீதிமன்றம் கைதான மீனவர்களில், 12 பேருக்கு கடும் அபராதம் விதித்து, அதை செலுத்தாவிட்டால், ஆறு மாதம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கி உள்ளது. மீதமுள்ள 1-0 பேருக்கு நாளை மறுதினம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப் படகுகளை உடனடியாக விடுவிக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, நாளை உண்ணாவிரதம் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க., பங்கேற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.