ADDED : ஜூலை 16, 2024 02:25 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணி வரை அதிகபட்சமாக மணிமுத்தாறு நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 42, ஊத்து எஸ்டேட் பகுதியில் 38, காக்காச்சியில் 30 மி.மீ., மழை பதிவானது அம்பாசமுத்திரத்தில் 15, பாபநாசத்தில் 12, சேர்வலாறு அணை பகுதியில் 20, சேரன்மகாதேவி 8, மாஞ்சோலையில் 18 மி.மீ., மழை பதிவானது. தொடர்மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
குற்றாலத்தில் நேற்று முன்தினம் மாலையிலிருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்று காலை முதல் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மழை காரணமாக தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் ரம்மியமான சீசன் நிலவுகிறது.

