'யாருக்காக மாணவியரை தவறாக வழி நடத்தினார் நிர்மலா தேவி?'
'யாருக்காக மாணவியரை தவறாக வழி நடத்தினார் நிர்மலா தேவி?'
ADDED : மே 01, 2024 11:47 PM
ஈரோடு:''பேராசிரியை நிர்மலாதேவி, யாருக்காக மாணவியரை தவறாக வழி நடத்தினார். அந்த முக்கிய புள்ளி யார் என வெளிப்படுத்த வேண்டும்,'' என, முத்தரசன் கேள்வி எழுப்பினார்.
ஈரோட்டில் இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறியதாவது:
மத்திய அரசால், 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்த சாதனைகள், திட்டங்களை பட்டியலிட்டு கூறி, ஓட்டு கேட்க முடியவில்லை. மாறாக, மக்களிடம் பிரிவினையை பேசுகிறார்.
மோடி, பா.ஜ., தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், 'சிறுபான்மையினரே வெளியேறுங்கள்' என்றும், 'பாகிஸ்தான் செல்லுங்கள்' என்றும்கூறுவது கண்டிக்கத்தக்கது.
இரு கட்ட தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற அச்சம் வந்ததாலும், தமிழகத்துக்கு, ஒன்பது முறை வந்தும் பயனில்லை என்ற அதிருப்தியில், ஓட்டு பெற வெறித்தனமாக, தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர்.
தேர்தல் ஆணையத்திடம் காங்., மற்றும் கம்யூ., கட்சிகள் புகார் செய்ததும், விளக்கம் கேட்டு நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. தேர்தல் ஆணையரை நியமிக்க பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் கொண்ட குழுவை அமைத்து நியமிக்கின்றனர்.
இச்செயல்பாடு, தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இழக்க செய்கிறது.
அமலாக்க துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமைப்புகள், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளை பழி வாங்குகிறது.
'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால், மூன்று நிமிடத்தில் பிரதமர் யார் என்பதை அறிவித்து விடுவோம்.
கடந்த காலங்களில் லால் பகதுார் சாஸ்திரி, மன்மோகன் சிங், குஜ்ரால், தேவகவுடா போன்றோர் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு, பிரதமராகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பேராசிரியை நிர்மலா தேவி, மாணவியரை தவறாக வழி நடத்தியதற்காக, நீதிமன்றம் தண்டனை விதித்ததை வரவேற்கிறோம்.
அதேநேரம், அவர் யாருக்காக மாணவியரை தவறாக வழி நடத்தினார் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த முக்கிய புள்ளி குறித்த விபரத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

