ADDED : மே 07, 2024 09:42 PM
சென்னை:மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள, உபரி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டில், பள்ளி திறக்கும் முன்பே கட்டாய இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்துக்கு ஏற்ப, ஆசிரியர்களை நியமிக்க விதிகள் உள்ளன. இதன்படி, மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் உபரியாக உள்ளவர்களை, வரும் கல்வி ஆண்டில் வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பணி நிரவல் எனப்படும் இந்த நடவடிக்கையை, அடுத்த மாதம் மேற்கொள்ள வேண்டும் என, பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளார். முதுநிலை ஆசிரியர்களுக்கு, ஜூன் 16; பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் 24ல் உபரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் குறைவாக உள்ள இடங்களில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை, பணி நிரவல் அடிப்படையில், ஜூன் 30க்குள் கட்டாய இடமாறுதல் பணிகளை முடிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

