27,000 கடலாமை முட்டைகள் சேகரிப்பு இறப்பு குறைவதால் வனத்துறை ஆறுதல்
27,000 கடலாமை முட்டைகள் சேகரிப்பு இறப்பு குறைவதால் வனத்துறை ஆறுதல்
ADDED : பிப் 27, 2025 11:26 PM
சென்னை:சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடலாமைகள் இறந்து கரை ஒதுங்குவது குறைந்துள்ள நிலையில், சேகரிக்கப்படும் முட்டைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும், டிச., முதல் மார்ச் வரை, கடலாமைகள் கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். வனத் துறையினர், உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் துணையுடன், இந்த முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த வகையில், தமிழகம் முழுதும், 2023 - 24 ஆண்டில், 2.50 லட்சம் கடலாமைகள் முட்டைகள் சேகரிக்கப்பட்டதில், 2.15 லட்சம் கடலாமை குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
இந்நிலையில், 2024 - 25ல் கடலாமைகள் முட்டைகள் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை, வனத் துறை மேற்கொண்டது. ஆனால், ஜன., பிப்., மாதங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், கடலாமைகள் இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்தது.
இரண்டு மாதங்களில், சென்னை கடலோரத்தில் மட்டும், 1,500க்கும் மேற்பட்ட கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கின. இதையடுத்து, கடலில் விதிகளை மீறும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போது, கரைக்கு வந்து கடலாமைகள் முட்டையிடுவது அதிகரித்து வருவதாகவும், இறப்பும் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக கடலாமைகள் பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே, கரைக்கு வந்து முட்டையிடும். நடப்பு ஆண்டில், கரையை நெருங்கும் நிலையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால், கடலாமைகள் அதிகமாக இறந்தன.
இதனால், கடலாமை முட்டைகள் சேகரிப்பில், மிக பெரிய அளவுக்கு சரிவு ஏற்பட்டது. பிப்., முதல் வார நிலவரப்படி, சென்னை கடலோர பகுதிகளில், 7,900 முட்டைகள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.
இந்நிலையில், கரையில் கடலாமைகள் முட்டைகள் கிடைப்பது அதிகரித்துள்ளது. பிப்., இறுதி வார நிலவரப்படி, 706 இடங்களில் இருந்து, 27,000 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதே காலத்தில் கடந்த ஆண்டு, 44,000 கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. அடுத்து வரும் நாட்களில், கடலாமை முட்டைகள் கிடைப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.