அரசு நிலத்தில் மரம் வெட்டினால் சிறை விதிகளை கடுமையாக்குது வனத்துறை
அரசு நிலத்தில் மரம் வெட்டினால் சிறை விதிகளை கடுமையாக்குது வனத்துறை
ADDED : ஆக 03, 2024 12:29 AM
சென்னை:அரசுக்கு சொந்தமான நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டுபவர்களுக்கு, சிறை தண்டனை விதிக்கும் வகையில், விதிகள் கடுமையாக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதற்காக பசுமை தமிழகம் என்ற இயக்கம் துவக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரங்கள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது, ஒவ்வொரு பகுதியிலும், அரசு மற்றும் தனியார் வாயிலாக மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
இதில், ஒவ்வொரு மரக்கன்று குறித்த துல்லியமான விபரங்களை, ஆன்லைன் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மரங்களை பாதுகாப்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த வகையில் மரங்களை வெட்டுவதை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தனியார் நிலங்களில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டுவது, இடம் மாற்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது கடுமையாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பசுமை பரப்பை உயர்த்துவதில், பழைய மரங்களை பாதுகாப்பது மிக முக்கியம். குறிப்பாக, அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரங்கள், சமூக விரோதிகளால் வெட்டி எடுத்து செல்லப்படுகிறது.
இந்த வகையில் அரசுக்கு சொந்தமான நிலங்களில், மரங்களை அனுமதியின்றி வெட்டுவோருக்கு, சிறை தண்டனை உள்ளிட்ட, கடும் தண்டனை வழங்கும் வகையில் விதிகள் திருத்தப்பட உள்ளன. இதற்காக, புதிய சட்டத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.