ADDED : மார் 10, 2025 05:38 AM
சென்னை: தமிழகத்தில், 10 மாவட்டங்களில், 50 இடங்களில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் சமயத்தில், பல்வேறு வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்.
இதைத்தடுக்க, தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், நெடுஞ்சாலைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், செயற்கைக்கோள் வாயிலாக கண்காணித்து, காட்டுத்தீ ஏற்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில், நீலகிரி, திருப்பூர், தேனி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், 50 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் வாயிலாக பெறப்பட்ட தகவல் அடிப்படையில், அந்தந்த மாவட்ட வனப்பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால், காட்டுத்தீ தொடர்ந்து பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.