ADDED : ஆக 20, 2024 04:23 AM

சென்னை: முன்னாள் ராணுவ தளபதி பத்மநாபன், 83, நேற்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரின் உடலுக்கு கவர்னர் ரவி, அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 1940 டிச., 5ல் பிறந்த இவர், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்டிரியஇந்திய ராணுவ கல்லுாரி, மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்திலும் படித்தார். 1959ல் ராணுவத்தில் சேர்ந்து, பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார்.
பல்வேறு பதக்கங்களை பெற்ற இவர், 2000ம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உயர்ந்து, 2002ல் ஓய்வு பெற்றார். சென்னை, அடையாறில் உள்ள அவரின் இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரின் உடலுக்கு, கவர்னர் ரவி, முதல்வர் சார்பில் அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, தென்சென்னை எம்.பி., தமிழச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் ப்ரார் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

