கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறாத முதல்வர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறாத முதல்வர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
ADDED : ஜூலை 01, 2024 03:14 AM
காரைக்குடி: ''கள்ளக்குறிச்சி சென்று கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறாதது மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லாததை காட்டுகிறது,'' என, காரைக்குடியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடினார்.
அவர் மேலும் கூறியதாவது: எதிர்பாராத நிகழ்வுகளில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை ஈடாக கருத முடியாது. சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை.
லோக்சபா தேர்தலில் 40 இடங்களில் வென்று விட்டோம் என்ற ஆணவத்தின் உச்சத்தில் தி.மு.க.,வினர் உள்ளனர். உச்சத்தில் இருப்பவர் கீழே வருவதும், கீழே இருப்பவர் உச்சத்திற்கு போவதும் தமிழக அரசியலில் புதிதல்ல.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கூட்டணி குறித்து பொது செயலாளர் பழனிசாமி தான் முடிவு செய்வார். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு ராஜதந்திரம். முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க., புறக்கணித்தது. சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழந்தது.
சட்டசபையில் எதிர்க்கட்சியின் ஜனநாயக குரல் நெறிக்கப்பட்டு விட்டது. மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு, போதைப்பொருள் கடத்தல், மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் உள்ளன. இதற்கு வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.