ஐ.ஏ.எஸ்., அதிகாரி பீலாவிடம் தகராறு முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் கைது
ஐ.ஏ.எஸ்., அதிகாரி பீலாவிடம் தகராறு முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் கைது
ADDED : மே 25, 2024 02:09 AM

சென்னை:பிரிந்து வாழும் மனைவியிடம் தகராறு செய்து, சொகுசு பங்களா காவலாளியை தாக்கியது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் கைது செய்யப்பட்டார்.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தமிழக காவல் துறையின் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு, விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால், கைது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ராஜேஷ்தாசும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், எரிசக்தி துறை செயலருமான பீலா வெங்கடேசனும் காதலித்து திருமணம் செய்தவர்கள். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். பீலா விவாகரத்து பெற முயற்சி செய்து வருகிறார்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது, செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் சொகுசு பங்களா வாங்கி உள்ளனர். அது தற்போது பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 18ம் தேதி, சொகுசு பங்களாவுக்கு ராஜேஷ்தாஸ் சென்றுள்ளார். அவருடன் அடையாளம் தெரியாத, 10 பேர் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் காவலாளியை தாக்கி உள்ளனர். பீலாவிடமும் ராஜேஷ்தாஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த பங்களாவின் மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ராஜேஷ்தாஸ் மற்றும் மர்ம நபர்கள், சொகுசு பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக பீலா, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பனையூரில் ராஜேஷ்தாசை நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். திருப்போரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ராஜேஷ்தாஸ் முறையிட்டார். அதை ஏற்று, நீதிபதி அனுபிரியா, அவரை அவரது சொந்த ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

