கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை விற்க கூறிய பெரிய தலை எது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை விற்க கூறிய பெரிய தலை எது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி
ADDED : ஜூன் 25, 2024 01:48 AM
விருதுநகர்: ''கள்ளிக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை விற்க கூறிய பெரிய தலை எது. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என விருதுநகரில் அ.தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: அ.தி.மு.க., எந்த சூழலிலும் அழியாது. 40 இடங்களில் தோற்றாலும், ஓட்டு சதவீதத்தில் வென்றுள்ளோம். தி.மு.க., தோல்வி பாதையில் போகிறது. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும். முன்னாள் முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணம் வருத்தமளிக்கிறது. மூன்றாண்டுகளாக கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் உற்பத்தி நடக்கிறது. அங்கு கள்ளச்சாராயத்தை யார் விற்பது என ஏலம் விட்ட கூத்தும் நடந்துள்ளது. கள்ளச்சாராயத்தை விற்க கூறிய பெரிய தலை எது. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழிக்க திறனற்ற இந்த தி.மு.க., அரசு வேண்டுமா.
போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று விலக வேண்டும். கள்ளச்சாராயத்தில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். இதே போல் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஏன் நிவாரணத்தை உயர்த்தி வழங்க கூடாது. ஊரார் சிரிக்க, திருவிழா கொண்டாட தன் உடலை கருக்கி சாகிறவன் பட்டாசு தொழிலாளி. அவர்களுக்கு பெரிய நிவாரணம், வாரிசுகளுக்கு வேலை என எதுவும் இல்லை.
பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு வழங்கும் ரூ.3 லட்சம் வாழ்வாதாரத்திற்கு போதாது என்றார்.