முன்னாள் அமைச்சர் வழக்கு தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்'
முன்னாள் அமைச்சர் வழக்கு தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்'
ADDED : செப் 14, 2024 09:04 PM
சென்னை:அவதுாறு வழக்கை ரத்து செய்யக் கோரி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவுக்கு, அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், விழுப்புரம் மாவட்டம், கோலியனுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், தமிழக முதல்வரை விமர்சித்திருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக, முதல்வர் சார்பில், விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சண்முகம் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், 'அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பேசும் பேச்சு அடிப்படையில், தொடர்ந்து அவதுாறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏற்கனவே குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதுாறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. என் விமர்சனம், அவதுாறு ஆகாது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்; அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.