காங்., வேட்பாளருக்கு போட்டியாக முன்னாள் எம்.பி., மனு தாக்கல்
காங்., வேட்பாளருக்கு போட்டியாக முன்னாள் எம்.பி., மனு தாக்கல்
ADDED : மார் 28, 2024 12:00 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு போட்டியாக அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., ராமசுப்பு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருநெல்வேலி தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., போட்டியிடுவதாக முடிவானது. காங்.,கில் நிலவும் கோஷ்டி பூசலால் இழுபறியானது. இறுதியில், ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார்.
நேற்று காலை 11:00 மணிக்கு அவர் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதி பெறப்பட்டது.
தி.மு.க.,வின் இரு கோஷ்டி நிர்வாகிகளின் அலுவலகங்கள், காங்., அலுவலகங்களுக்கு சென்று நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து விட்டு மதியம் 2:00 மணிக்கு தேர்தல் அலுவலர் கார்த்திகேயனிடம் வேட்பு மனு செய்தார்.
இதற்கிடையில் அவருக்கு போட்டியாக காங்., மாநில பொதுச்செயலர் வானமாமலை, முன்னாள் எம்.பி.,ராமசுப்பு ஆகியோர் மனுத்தாக்கல் செய்ய படிவம் பெற்றனர்.
இதில் ராமசுப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வானமாமலை தாமதமாக வந்ததால் அவரது வேட்பு மனு ஏற்கப்படவில்லை.
காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய வந்ததை படம், வீடியோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலக வாசலில் பத்திரிகையாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கலெக்டர் கார்த்திகேயன் சமரசம் பேசினார்.
துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில், கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக போட்டியிட, அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ராஜா, நேற்று மனுத்தாக்கல் செய்தார். இவர், 'நாம் இந்தியர்' என்ற கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார்

