பிரதமர் மோடிக்கு எம்.ஜி.ஆரை., தெரியுமா முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி
பிரதமர் மோடிக்கு எம்.ஜி.ஆரை., தெரியுமா முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி
ADDED : ஏப் 17, 2024 01:13 AM
சிவகங்கை:''தமிழக மக்களுக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை தெரியும். ஆனால் பிரதமர் மோடிக்கு எம்.ஜி.ஆரை தெரியுமா,'' என, சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும். சிவகங்கையில் வினோத போட்டி நடக்கிறது. காங்.,க்கு மாற்றாக அ.தி.மு.க.,- பா.ஜ., மோதுகின்றன.
பா.ஜ., - அ.தி.மு.க., கள்ள உறவு
பா.ஜ.,வின் பொல்லாத சட்டம், அராஜக நடவடிக்கைகளை ஆதரித்தது அ.தி.மு.க., தான். இதில் இருந்தே பா.ஜ., - அ.தி.மு.க., கள்ள உறவு வெளிப்படுகிறது. இன்றைக்கு ஜாதி, சமுதாய அடிப்படையில் வேட்பாளர்கள் ஓட்டு கேட்பது அவமானம்.
பிரதமர் மோடி அடிக்கடி வந்து இட்லி, தோசை பிடிக்கும் என்கிறார். பெருவெள்ளம் வரும்போது வராதவர், மூடி கிடந்த ஆலைகளை திறக்க பதில் சொல்லாதவர் அவர். தமிழ் மண்ணில் பா.ஜ., கால் ஊன்ற முடியாது.
மோடிக்கு எம்.ஜி.ஆரை., தெரியுமா
காங்., மற்றும் தி.மு.க., கூட்டணி ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். இந்திய நிலம் இரண்டாயிரம் சதுர கி.மீ., நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது. 2019 ஜூனில் பிரதமர் மோடி இந்தியாவில் எந்த நிலத்தையும், யாரும் ஆக்கிரமிக்கவில்லை என கூறி விட்டார். அப்படி நடக்கவில்லை என்றால் எதற்கு 21 முறை பேச்சுவார்த்தை நடத்தினர்.
எம்.ஜி.ஆரை போல் மோடி ஆட்சி இருப்பதாக சொல்கிறார்கள். எம்.ஜி.ஆரை., தமிழக மக்களுக்கு தெரியும். ஆனால் மோடிக்கு எம்.ஜி.ஆரை தெரியுமா. காங்., தேர்தல் அறிக்கை பேசுபொருள் ஆகியுள்ளது. பா.ஜ., தேர்தல் அறிக்கை 3 மணி நேரத்தில் புதைந்து போன அறிக்கையானது.
கச்சத்தீவு அரசியல் விளையாட்டு
பா.ஜ., தான் கச்சத்தீவு பிரச்னையை எழுப்பியது. இதை ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் கருத்து கணிப்பை நான் நம்புவதில்லை என்றார்.

