உருவாகிறது 'ரேமல்' புயல்: மேற்கு வங்கம் நோக்கி செல்கிறது
உருவாகிறது 'ரேமல்' புயல்: மேற்கு வங்கம் நோக்கி செல்கிறது
ADDED : மே 24, 2024 04:36 AM

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, 'ரேமல்' என்ற பெயர் சூட்டப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வங்கக் கடலின் தென் மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடகிழக்கில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.
கன மழை
இது, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் வலுப்பெற்று, நாளை புயலாக மாறி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்.
அதைத் தொடர்ந்து தீவிர புயலாகி, மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும். கேரள கடலோரம், அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ளது.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
மேலும், இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிக வெப்ப நிலை பதிவாகும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில், லேசான மழை பெய்யும்; அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெயர் பட்டியல்
வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு, 'ரேமல்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு, உலக வானிலை ஆய்வு மையத்தின் சார்பில், பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய 13 நாடுகளின் சார்பில் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் ரேமல் என்ற பெயரை, ஓமன் நாடு வழங்கியுள்ளது. அரேபிய மொழியில் ரேமல் என்றால், மணல் என்று அர்த்தம்.