ADDED : ஏப் 17, 2024 10:03 PM
சென்னை:கோடைக்காலத்தில் டெங்கு, டைபாய்டு, எலி காய்ச்சல், மூளை காய்ச்சல் என, நான்கு வித பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:
கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது, ஆற்று நீர், கிணற்று நீர் குடிநீருக்கு பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. அந்நீரின் வாயிலாக எலி காய்ச்சல், மூளை காய்ச்சல், டைபாய்டு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல், வீடுகளில் தேக்கி வைக்கும் குடிநீரை முறையாக மூடி பராமரிக்காமல் இருந்தால், நன்னீரில் வளரக்கூடிய 'ஏடிஸ்' கொசுக்கள் உருவாகும். சுற்றுப்புறங்கள் துாய்மையாக இல்லாதபட்சத்தில், அப்பகுதியில் பெய்யும் மழையாலும் 'ஏடிஸ்' கொசுக்கள் உருவாகும்.
இதன் காரணமாக, அடுத்து வரும் சில மாதங்களில், இந்த நான்கு விதமான காய்ச்சல் பாதிப்புகள் சவாலானதாக இருக்கும். எனவே, குடிநீரை பருகும்போது, அவற்றை காய்ச்சி குளிர்வித்த பின் பருக வேண்டும். சுற்றுப்புறங்களையும் துாய்மையாக பராமரிப்பதன் வாயிலாக, டெங்கு, டைபாய்டு, மூளை மற்றும் எலி காய்ச்சல் ஆகியவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

