இரிடியத்தில் முதலீடு எனக்கூறி ரூ.18 லட்சம் மோசடி; எம்.எல்.ஏ., நாசரின் தம்பி உட்பட 2 பேர் மீது வழக்கு
இரிடியத்தில் முதலீடு எனக்கூறி ரூ.18 லட்சம் மோசடி; எம்.எல்.ஏ., நாசரின் தம்பி உட்பட 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 09, 2024 04:19 AM
மதுரை : மதுரையில் இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால், 20 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனக்கூறி, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ஆவடி நாசரின் தம்பி, முகமது ரபி உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை தெற்குவாசலை சேர்ந்தவர் தெய்வேந்திரன்; பர்னிச்சர் கடை நடத்துகிறார். இவரது கடை எதிரே ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்த கலைச்செல்வி அறிமுகமானார்.
இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என, தெய்வேந்திரனிடம் கூறினார்.
அவரை நம்ப வைக்க திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ஆவடி நாசரின் தம்பி முகமது ரபியை போன் வாயிலாக, தெய்வேந்திரனிடம் கலைச்செல்வி பேசவைத்தார்.
அவரும் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார். இதை தொடர்ந்து மதுரை வந்த முகமது ரபியை, தெய்வேந்திரன் சந்தித்து, 3 லட்சம் ரூபாய் கொடுத்தார். சில மாதங்களுக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்டு ஆன்லைன் வாயிலாக, முகமது ரபி 2 லட்சம் ரூபாய் பெற்றார்.
பின், சென்னை ஹோட்டலில் 'மீட்டிங்' என்று அழைத்து, அவரிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றனர்.
தெய்வேந்திரன் போல, முதலீடு செய்த பலரும் அங்கு வந்திருந்தனர்.
'இன்னும் மூன்று நாட்களில் மும்பைக்கு நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியிருக்கும். அங்கு அவரவருக்கு பணம் செட்டில்மென்ட் செய்யப்படும்' என்றனர்.
தெய்வேந்திரனிடம் 'உங்களுக்கு சேரவேண்டிய, 20 கோடி ரூபாய் தயாராக உள்ளது. அதனால் மேலும், 5 லட்சம் ரூபாய் கொண்டு வாருங்கள்' என்று கலைச்செல்வி கூறியதை நம்பி, 5 லட்சம் ரூபாயை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தார்.
ஆனால், பல மாதங்கள் கடந்தும், 20 கோடி ரூபாயை தராத நிலையில், கலைச்செல்வியிடம் கொடுத்த 13 லட்சம், முகமது ரபியிடம் கொடுத்த 5 லட்சம் ரூபாயை கேட்ட போது தெய்வேந்திரன் மிரட்டப்பட்டார்.
இதுதொடர்பாக இருவர் மீதும் மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

