ஆன்லைன் வர்த்தகம், பகுதி நேர வேலை என இன்ஜினியரிடம் ரூ.19.57 லட்சம் மோசடி; தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் வர்த்தகம், பகுதி நேர வேலை என இன்ஜினியரிடம் ரூ.19.57 லட்சம் மோசடி; தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ADDED : மே 13, 2024 07:35 AM
தேனி : தேனியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ. 8.98 லட்சம், மற்றொரு இன்ஜினியரிடம் பகுதிநேர வேலை தருவதாகக் கூறி ரூ.10.59 லட்சம் என மொத்தம் 19.57 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ரூ.8.98 லட்சம் மோசடி
பெரியகுளம் தனியார் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியர் தாஸ் 35. இவர் இன்ஸ்டாகிராமில் பங்கு வர்த்தகம் குறித்த விளம்பரத்தை பார்த்தார். அதன்படி ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைந்தார்.
குழுவில் சில நிறுவன பங்குகளின் விபரங்களை பகிர்ந்து, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினர். இதனை இணையத்திலும் தாஸ் சரிபார்த்தார். தாஸை குழுவின் அட்மின் தொடர்பு கொண்டு ஒரு செயலியை பதிவிறக்கக் கூறி, அதில் சில விவரங்களை பதிவு செய்த பின் பயனாளர் ஐ.டி., வழங்கினர்.
முதலீடு செய்ய வேண்டிய செயலியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டு, அவர்கள் கூறிய இரு வங்கிகளின் 4 கணக்குகளில் மார்ச் 18 முதல் ஏப்., 22 வரை ரூ.10.92 லட்சம் அனுப்பினார். இதில் வருவாயாக ரூ.1.93 லட்சத்தை பெற்றார். மீதமுள்ள ரூ.8.98 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றினர்.
ஆனால் செயலியில் ரூ.27.73 லட்சம் லாபம் பெற்றுள்ளதாக காண்பித்தது. இதனை எடுக்க முயன்ற போது ரூ.8.87 லட்சம் வரி செலுத்த கூறினர். தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த தாஸ் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ரூ.10.59 லட்சம் மோசடி
போடி வினோத் 35. சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது வாட்ஸ் அப்பிற்கு பகுதி நேர வேலை வாய்ப்பில் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி ஏப்.,1ல் வந்தது. அதில் அவர்கள் அனுப்பும் ஓட்டலை கூகுள் மேப் மூலம் கண்டறிந்து ஓட்டலுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் வழங்க வேண்டும்.
இதே போல் 3 முறை வழங்கினார். ரூ.150 வழங்கப்படும் என இருந்தது. தினமும் இது போல் 25 டாஸ்குகள் முடிக்க வேண்டும். பணம்கட்டி டாஸ்க் முடித்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என கூறினர். இதை நம்பிய வினோத் ஏப்., 2 முதல் ஏப்.,4 வரை 12 வங்கி கணக்குகளுக்கு ரூ.10.74 லட்சம் அனுப்பினார். இதில் லாபமாக ரூ.15,200 பெற்றார்.
மீதி வரவேண்டிய ரூ.10.59 லட்சம் பற்றி கேட்ட போது, மேலும் பணம் கட்டினால் தான் மீதிப்பணம் கிடைக்கும் என தெரிவித்தனர். பின் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட நபரிடமிருந்து பதில் ஏதுமில்லை. இவரும் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.