ADDED : பிப் 26, 2025 10:06 PM
சென்னை:ஹஜ் யாத்ரீகர்களை குறி வைத்து மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத் தலைவர் அஹமத் தம்பி அளித்த பேட்டி:
முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும், சவுதி அரேபியாவில் உள்ள, மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு, ஹஜ் பயணம் செல்வோருக்கு வசதியாக, தகுதியான நிறுவனங்களை, மத்திய சிறுபான்மை நலத் துறை தேர்வு செய்துள்ளது.
அந்நிறுவனங்களின் பட்டியலை, 2024, டிசம்பரிலேயே வெளியிட்டு விட்டது. இந்த விபரங்கள், https://thoa.in மற்றும் https:pto.hag.gov.in என்ற இணையதளத்திலும் உள்ளன.
ஆனால், சில அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், மெக்காவிற்கு குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வதாக, ஹஜ் பயணம் செல்வோரை குறிவைத்து, பண மோசடி செய்து வருகின்றன.
அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், யாத்ரீகர்களை மெக்கா அழைத்துச் சென்று விட்டு, 'ரிட்டன் டிக்கெட்' ஏற்பாடு செய்யாமல், அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர்.
இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது, காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம். இதுபோன்ற நபர்களின் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
சவுதி அரேபிய அரசு, யாத்ரீகர்கள் அதிகமானோர் வரும் வகையில், 'ஹஜ் கோட்டா'வை அதிகரித்து இருப்பதாகவும் வதந்தி பரப்பப்படுகிறது. அந்நாட்டு அரசு, அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கடந்தாண்டு, மெக்காவில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், உயிரிழப்புகள் நடந்தன.
இந்தியாவில் இருந்து சென்ற யாத்ரீகர்கள் தங்கும் இடங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படாமல் இருந்தன. வெகுதுாரத்தில் இருந்து, கடுமையான வெயிலில் நடந்து செல்ல வேண்டி இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு, மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சராக உள்ள கிரண் ரிஜிஜு, இந்திய யாத்ரீகர்கள் தங்குவதற்கான இடங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகளுடன் இணைந்து மிகச் சிறப்பாக செய்துள்ளார்.
இதற்காக மனப்பூர்வமான நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.

