ADDED : டிச 09, 2024 08:46 AM
திருப்பூர் : டிரைவர்கள் தட்டுப்பாட்டை குறைக்க, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் இலவச டிரைவிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் இலகு மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுவது குறித்து, 30 முதல், 45 நாள் இலவசமாக பயிற்சி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்திருந்து பதிவு செய்தவர்களில் ஆர்வமுடையவர்களை தேர்வு செய்து, இலவசமாக தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி தர திட்டமிடப்பட்டு வருகிறது.
வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டிரைவர்களுக்கு தட்டுப்பாடு தொடர்கிறது. எதிர்காலத்தில் டிரைவிங் சார்ந்த வேலைவாய்ப்பை இளைஞர்கள் பெற இலவச பயிற்சி பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
திருவாரூர் மாவட்டம், ரெட் ஹில்ஸ்; காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகர்; தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
வரும் நாட்களில் பிற மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்; தகுதியுள்ள பயனாளிகள் www.naanmudhalvan.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுவர்.
பயிற்சி குறித்த விரிவான விபரங்கள், 2025ம் ஆண்டு ஜன., முதல் அல்லது இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும்'' என்றனர்.