தனியார் கல்லுாரிகளில் இலவச உயர்கல்வி: சென்னை பல்கலை 'அட்மிஷன்' அறிவிப்பு
தனியார் கல்லுாரிகளில் இலவச உயர்கல்வி: சென்னை பல்கலை 'அட்மிஷன்' அறிவிப்பு
ADDED : ஏப் 22, 2024 06:19 AM
சென்னை : தனியார் கல்லுாரிகளில், கல்விக் கட்டணமின்றி பட்டப்படிப்பு மேற்கொள்ளும் திட்டத்தில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை, சென்னை பல்கலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பல்கலை பதிவாளர் ஏழுமலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தின் முதல் முறையாக பட்டப்படிப்பு மேற்கொள்ள இருப்பவர்களுக்கு, தனியார் கல்லுாரி களில், கல்விக் கட்டணமின்றி படிக்க, சென்னை பல்கலை சார்பில் இலவச கல்வி திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டம், 2010 - 11ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
இதன்படி, வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான விபரங்கள், சென்னை பல்கலையின், www.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் இருந்து, 15 நாட்களுக்குள் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பத்துடன், அனைத்து வகை சான்றிதழ்களின் நகலையும், பதிவேற்ற வேண்டும்.
இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

