ADDED : ஏப் 18, 2024 12:48 AM
திருவண்ணாமலை, ம.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் பறக்கும் படையினருக்கு புகார் சென்றது. பூட்டை உடைத்து சோதனையிட்டனர். பணம் எதுவும் சிக்கவில்லை.
திருவண்ணாமலையில் நிதி நிறுவனத்தில், உரிய ஆவணமின்றி பணம் வைத்துள்ளதாக, தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சோதனையிட்டு, உரிய ஆவணமின்றி இருந்த 5 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
↓சேலம், சீலநாயக்கன்பட்டி, கணபதி நகரில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பணம் வினியோகித்த சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பேராசிரியர் சசிகுமார், 43, மற்றும் பாப்பம்பாடியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்த, 1.76 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
அரியலுார் மாவட்டம், சிங்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அடைக்கலசாமி, 80, என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 20 லட்சம் ரூபாய் இருந்தது. தன் பேத்தியின் திருமணத்துக்காக வைத்துள்ளதாக அடைக்கலசாமி தெரிவித்ததால், பணம், ஆவணங்கள் என எதையும் எடுக்காமல், அதிகாரிகள் புறப்பட்டனர்.
ராமநாதபுரம் சின்னக்கடைப்பகுதியில் நகராட்சி 31வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜஹாங்கீர் என்பவரிடம் இருந்து 12,500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்தனர்.
துாத்துக்குடி முத்தையாபுரம் நேசமணி நகர் பகுதியில் தி.மு.க., இளைஞரணி நிர்வாகி பொன் கற்பகராஜ் என்பவர் வீட்டில், 468 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி, அவற்றை பதுக்கிய பொன் கற்பகராஜை கைது செய்தனர்.
↓ நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நேற்று காலை, தி.மு.க., ஒன்றிய செயலர் நெல்லை கண்ணன் என்பவரது காரில் இருந்த 8.59 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பிற கட்சியினர் பணம் கொடுப்பதால், தேர்தலை ரத்து செய்யக் கோரி, அ.தி.மு.க., செயலர் அன்பழகன் மற்றும் வேட்பாளர் தமிழ்வேந்தன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் நேற்று, ராஜிவ் சிக்னலில் இருந்து ஊர்வலமாக சென்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
- நமது நிருபர் குழு -

