UPDATED : ஆக 09, 2024 11:50 PM
ADDED : ஆக 09, 2024 11:46 PM

சென்னை,: அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பொறுப்பு வழங்குவது குறித்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 19ம் தேதி, அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், துணை முதல்வர் உதயநிதி என்று குறிப்பிட்டார். உடனே, வாய் தவறி அந்த தகவலை வெளியிட்டு விட்டதாக சொல்லி சமாளித்தார்.
“வரும் 19ம் தேதிக்கு பிறகு தான் அவ்வாறு அழைக்க வேண்டும். தவிர, அதற்கான அறிவிப்பை மேலிடம் தான் வெளியிடும்; நான் சொல்ல முடியாது,” என்றும் விளக்கம் அளித்தார். இந்த விளக்கமே, அவர் வாய் தவறியோ, தவறுதலாகவோ பேசவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்க தொழிலதிபர்களை சந்தித்து பேச இந்த பயணம் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என்றும், முதல்வர் திரும்பும் வரையிலான காலகட்டத்தில், அமைச்சரவை கூட்டம் நடந்தால், அதற்கு தலைமையேற்பது முதலான பணிகளை உதய் கவனிப்பார் என்றும், கோட்டை வட்டாரத்தில் பேச்சு நிலவியது.
அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்படும்; இரு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய நபர்கள் சேர்க்கப்படுவர்; சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும் என்றும் தகவல்கள் உலா வந்தன.
இவை குறித்து அதிகாரபூர்வமாக எந்த விளக்கமும் வரவில்லை. ஸ்டாலினும், உதயநிதியும் இது குறித்த கேள்விகளுக்கு நேரடியான பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தனர்.
'உங்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு எப்போது வழங்கப்படும்?' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அதை முதல்வர் முடிவு செய்வார்' எனக்கூறி உதய் நழுவினார்.
இளைஞர் அணி கூட்டத்தில் பேசும் போது, ''எந்த பொறுப்பு வந்தாலும், இந்த பொறுப்பை மறக்க மாட்டேன்...'' என்று மூன்று புள்ளி வைத்தார். ஆம் அல்லது இல்லை என உறுதியாகக் கூறாமலே சஸ்பென்ஸ் தொடரச் செய்தார்.ஸ்டாலினும் அவர் பங்குக்கு இதே பாணியை தொடர்ந்தார்.
கடந்த 5ம் தேதி, சென்னையில் பல்வேறு பணிகளை அவர் ஆய்வு செய்த போது, 'உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே...' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'வலுத்துள்ளது; இன்னும் பழுக்கவில்லை' என, தன் தந்தை பாணியில் புதிராக பதில் அளித்தார்.
'துணை முதல்வராவது உறுதி; ஆனால், இப்போதைக்கு இல்லை' என்ற எண்ணத்தை இருவரின் பதில்களும் பிரதிபலித்தன.
இந்த பின்னணியில் தான், அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று ராமநாதபுரத்தில் நடந்த விழாவில், பேச்சின் இடையில், ''நம் துணை முதல்வர் உதயநிதி...'' என்று கூறிவிட்டு, சில வினாடி மவுனத்துக்கு பின், ''19ம் தேதிக்கு பின் தான் அப்படி அழைக்க வேண்டும். மேலிடத்திலிருந்து அறிவிப்பு வரும்; அதை நாம் சொல்ல முடியாது,'' என்றார்.
அவரது பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் 19ம் தேதி நிறைந்த பவுர்ணமி, ஆவணி அவிட்டம், வளர்பிறை தினம் என பஞ்சாங்கம் சொல்கிறது.
அன்று உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, தனிப்பட்ட அரசியல் சாசன பொறுப்பு அல்ல என்பதால், கவர்னரின் ஒப்புதலோ, பதவிப் பிரமாணமோ தேவையில்லை. அரசு உத்தரவாக வெளியிட்டால் போதுமானது என, அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.