ADDED : மே 28, 2024 05:02 AM

சென்னை : ''உள்நாட்டு தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி தயாரிக்கப்படும், 25 இன கால்நடைகளின் உறைவிந்து விற்பனை, ஆகஸ்ட் மாதம் துவங்கும்,'' என, தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய தலைவர் மீனேஷ் ஷா கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில், என்.டி.டி.பி., எனப்படும், மத்திய பால்வள மேம்பாட்டு வாரியம் வாயிலாக, கால்நடை உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
300 காளைகள்
இந்த உறைவிந்து நிலையத்தை ஆய்வு செய்த பின், தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய தலைவர் மீனேஷ் ஷா அளித்த பேட்டி:
நாடு முழுதும், 60 இடங்களில், கால்நடை உறைவிந்து உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு, மஹாராஷ்டிரா ராஹுரி, குஜராத் பிடாஜ், உத்தரபிரதேசம் சாலோன், தமிழகத்தின் அலமாதி ஆகிய நான்கு இடங்களில் உறைவிந்து உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
அலமாதியில், உள்நாட்டு தொழிற்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி, உறைவிந்து உற்பத்தி நிலையம், 358 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது, 2015 மே மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு, தமிழகத்தின் காங்கேயம்; ஆந்திராவின் புங்கனுார், ஓங்கோல்; கேரளாவின் வேச்சூர்; கர்நாடகாவின் ஹல்லிகர், அமிர்தமஹால், மல்நாடு கிடா உள்ளிட்ட, 25 இனத்தைச் சேர்ந்த, 300 காளைகள் பராமரிக்கப்படுகின்றன.
உலகின் மிகச்சிறிய கால்நடை இனங்களான புங்கனுார், வேச்சூர் இன காளைகளும், இங்கு பராமரிக்கப்படுகின்றன. வெளிநாட்டு கறவை இனங்களின் காளைகளும் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக ஆண்டுக்கு 1 கோடி உறைவிந்துகளை உற்பத்தி செய்யலாம்.
ஆய்வு
ஒரு உறைவிந்து குச்சி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தனியார் நிறுவனங்களால், 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கறவை மாட்டிற்கு மூன்று முறை, குறைந்தபட்சம் உறைவிந்து குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், 3,000 ரூபாய் வரை செலவாகும். அலமாதியில் உற்பத்தியாகும் உறை விந்து குச்சிகளை, 300 முதல் 350 ரூபாய்க்கு விற்க உள்ளோம். முதற்கட்டமாக, 10 லட்சம் உறைவிந்துகள் விற்கப்படும்.
இதை விவசாயிகள், தனியார் கால்நடை பண்ணையாளர்கள் மட்டுமின்றி, கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனங்களும் வாங்கி பயன் பெறலாம். அலமாதியில் உற்பத்தியாகும் உறைவிந்துகளை பயன்படுத்தி, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிஷா, கர்நாடகா மாநிலங்களில், கறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து, பால் உற்பத்தியை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உயர் மரபியல் விந்துவை பயன்படுத்தி பிறக்கும் உள்நாட்டு கறவைகள், நாள்தோறும் 15 லிட்டரும், வெளிநாட்டு கறவை இனங்கள், 25 முதல் 50 லிட்டர் பால் வரை கறக்கும்.
அலமாதி உறைவிந்து உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் உறைவிந்துவை பயன்படுத்தி, கறவை மாடுகளை மட்டுமே உற்பத்தி செய்ய உள்ளோம்.
இதற்கென பல்வேறு ஆய்வுகள், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன. இந்த உறைவிந்து விற்பனை ஆகஸ்ட்டில் தமிழகம் அல்லது டில்லியில் நடக்கும் விழாவில் துவங்கப்படும். புதிய அரசு பொறுப்பேற்றதும், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு மீனேஷ் ஷா கூறினார்.