1.5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு: ராமதாஸ்
1.5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு: ராமதாஸ்
ADDED : ஆக 19, 2024 04:18 AM

சென்னை: 'பாரதிதாசன் பல்கலை அலட்சியத்தால், உயர்கல்வியில் சேர முடியாமல் தவிக்கும் 1.5 லட்சம் மாணவர்களுக்கு, தற்காலிக பட்டச்சான்று வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருச்சி பாரதிதாசன் பல்கலையுடன் இணைக்கப்பட்ட, 147 கல்லுாரிகளில் படித்து, 2023 - -24ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பை, 1.5 லட்சம் மாணவ - மாணவியர் நிறைவு செய்துள்ளனர்.
விதிமுறைப்படி, 15 நாட்களில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 50 நாட்களுக்கு மேலாகியும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்படவில்லை.
இதனால், பட்டப்படிப்பு தகுதியில் பணிக்கு தேர்வான மாணவர்கள் வேலைக்கு சேர முடியவில்லை. தகுதிப்படி இடம் கிடைத்தும் உயர்கல்வி இடத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்காலிக பட்டச் சான்றிதழை வழங்காதது மட்டுமின்றி, அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. தற்காலிக பட்ட சான்றிதழ் வழங்க இன்னும் ஒரு மாதமாகும் என, பல்கலை தரப்பில் கூறப்படுகிறது.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் அனைவருக்கும் இந்த வார இறுதிக்குள், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழையும், தற்காலிக பட்டச் சான்றிதழையும் வழங்க பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

