எரிவாயு கிணறு விவகாரம்: மோடி தலையிட முதல்வர் கடிதம்
எரிவாயு கிணறு விவகாரம்: மோடி தலையிட முதல்வர் கடிதம்
ADDED : மார் 05, 2025 05:07 AM

சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் எரிவாயு கிணறுகள் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் மன்னார் வளைகுடா கடல் பகுதியில், கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது, ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின், ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை ஏலம் விடுவதற்கான பணிகளை, 11ம் தேதி துவக்கி உள்ளது. அந்த அறிவிப்பில், காவிரி படுகையில் 9,999 சதுர கி.மீ., பரப்பளவும் அடங்கும்.
இது, மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்திற்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைப்பது, அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தும்.
கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைக்கும். வண்டல் படிவுகள், நச்சு கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மன்னார் வளைகுடாவை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ள, லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.
ஏல அறிவிப்புக்கு முன், தமிழக அரசிடம் மத்திய அரசு எந்த கருத்தையும் கேட்கவில்லை. உரிய ஆலோசனை கேட்டிருந்தால், அனைத்து பிரச்னைகள் குறித்தும், தமிழக அரசின் வாயிலாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கும்.
எனவே, ஏல முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எரிவாயு கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட, அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும், பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய, பாதுகாக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதை கருத்தில் வைத்து, இந்த பிரச்னையில், பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.