கு.க., சிகிச்சைக்கு பின் கர்ப்பம்: பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு
கு.க., சிகிச்சைக்கு பின் கர்ப்பம்: பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஏப் 29, 2024 11:37 PM
மதுரை : கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு பின், பெண் கர்ப்பமுற்று குழந்தை பெற்றதால், 30,000 ரூபாய் அரசு இழப்பீடு வழங்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு: குமரி மாவட்டத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். எனினும், மீண்டும் கர்ப்பமுற்றேன்; குழந்தை பிறந்தது. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எப்போதும் 100 சதவீதம் வெற்றிகரமாக இருக்காது என்பது நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. சில நேரங்களில் தோல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக, 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மனுதாரருக்கு, 30,000 ரூபாயை கலெக்டர் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

