சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து பரபரப்பு
ADDED : மே 02, 2024 02:12 AM

சென்னை:சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில், வி.ஐ.பி., பயணியர் செல்லும் நான்காவது நுழைவாயிலில் உள்ள 7 அடி உயரமுடைய கண்ணாடி கதவு திடீரென உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, தொடர்ச்சியாக கண்ணாடி உடைந்து விழுந்தன.
90 முறை
உள்நாட்டு விமான முனையம், சர்வதேச விமான முனையம் என மாறி மாறி கண்ணாடி உடைந்து விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது. 90 முறைகளையும் தாண்டி இந்த விபத்துகள் நடந்து வந்தன.
நல்வாய்ப்பாக பெரிய அளவில் காயங்கள், உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.
இரு ஆண்டுகளாக, கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்காததால், விமான நிலைய அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இடையில் ஒருமுறை மட்டும், பெரிய கண்ணாடி கதவு உடைந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன்று வருகை பகுதியில், நான்காவது நுழைவாயிலில் உள்ள 7 அடி உயர கண்ணாடி கதவு, நேற்று முன்தினம் திடீரென உடைந்தது.
ஆனால், கண்ணாடி உறுதியானதாக இருந்ததால் சிதறி கீழே விழாமல், கதவிலேயே நொறுங்கிய நிலையில் இருந்தது. எனினும், அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
பயணியர் அச்சம்
வெளிமாநில கவர்னர்கள், வெளிநாட்டு துாதர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் செல்லும்போது மட்டும், அந்த நான்காவது நுழைவாயில் திறக்கப்படும்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சிறப்பு அனுமதி யாருக்கும் கிடையாது. எனவே, அந்த நுழைவாயில் மூடியே இருந்தது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உடைந்த கண்ணாடி கதவை அகற்றி, புதிதாக அமைத்துள்ளனர். இந்த கண்ணாடி கதவு எப்படி உடைந்தது என்பது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து நொறுங்குவது மீண்டும் நடந்துள்ளதால், ஊழியர்கள், பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

