ADDED : ஜூலை 16, 2024 01:50 AM
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை படத்தை அணிவித்து, சாலையின் நடுவே ஆட்டை வெட்டிய விவகாரம் தொடர்பாக போலீசார் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி அருகே, தி.மு.க., ஆதரவாளர்கள் சிலர், ஆட்டுக்கு அண்ணாமலை படத்தை அணிவித்து, சாலையின் நடுவே வெட்டினர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக, பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, ''பொது வெளியில் ஆட்டை வெட்டி கொண்டாடி உள்ளனர். இது, விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி குற்றம். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.
காவல்துறை தரப்பில், இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற முதல் பெஞ்ச், ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

