ADDED : பிப் 27, 2025 11:28 PM
சென்னை:'அரசு பஸ் குறிப்பேடு, 100 சதவீதம் தமிழில் தான் இனி வழங்கப்படும்' என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், சில பணிமனைகளில் கடந்த சில நாட்களாக, பஸ் குறிப்பேடுகள் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டன.
வழக்கமாக தமிழில் வழங்கப்பட்டு வந்த படிவங்கள், ஆங்கிலத்தில் மாற்றப்பட்டதால், அவற்றை நிரப்புவதில் ஊழியர்கள் சிரமம் அடைந்தனர். இது சுட்டிக்காட்டி, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
அதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று அளித்துள்ள விளக்கம்:
சென்னையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன நிதியுதவியுடன் கூடிய, நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு திட்டத்தின் கீழ், பஸ் மேலாண்மை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பணிமனை மேலாண்மை அமைப்பு, கணினிமயமாக்கப்பட்டு, வாகன பதிவுத் தாள்கள் உருவாக்கப்படுகின்றன.
வண்டி குறிப்பேடு, தமிழில் மட்டுமே அச்சடித்து தினமும் வழங்கப்பட்டு வந்தது. ஆரம்பக் கட்டத்தில் கணினி மென்பொருள் மேம்பாட்டின்போது, வாகன பதிவு தாள்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டன. பரீட்சார்த்த முறையிலான செயல்படுத்தலின்போது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது.
சில பணிமனைகளில், ஆங்கில படிவம் மட்டுமே வினியோகம் செய்வதாக புகார் எழுந்தது. தற்போது, ஆங்கில படிவம் நீக்கப்பட்டு, 100 சதவீதம் தமிழில் மட்டுமே பஸ் குறிப்பேடு வழங்க, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.