அறிவித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
அறிவித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : பிப் 26, 2025 01:49 AM

சென்னை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்து நடத்திய போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' வாயிலாக நேற்று மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தை தவிர்ப்பதற்கான முயற்சியில் அரசு இறங்கியது.
அதன்படி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ், கயல்விழி ஆகியோர் அடங்கிய குழு நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தியது. கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக உறுதியளித்தனர். இதற்கிடையே மறியல் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இரவு 7:30 மணியளவில் தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை அழைத்து அமைச்சர்கள் பேசினர். கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க நான்கு வாரம் கால அவகாசம் கேட்டனர். சம்மதிக்க மறுத்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
அதன்படி நேற்று, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் தலைமை செயலகம் உள்பட மாநிலம் முழுதும் உள்ள அரசு அலுவலங்களில் வருகை குறைவாக இருந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன. பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் திடீர் சுணக்கம் ஏற்பட்டது.
பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதித்தது. அரசு அலுவலகங்களில் நேற்றைய வருகைப் பதிவு குறித்த விபரங்களை காலை 11:30 மணிக்குள் மனிதவள மேலாண்மை துறை செயலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்தவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
2779 பள்ளிகள் முடக்கம்
கடந்த ஆட்சியில் இதே கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால் இப்போது போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்றனர்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களே பாடம் நடத்தும் நிலை உருவானது. பல பள்ளிகளில் காலை உணவுக்கு பின் காத்திருந்த மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். சில பள்ளிகளில் வகுப்பறை சாவி, தலைமை ஆசிரியர்களிடம் இருந்த நிலையில் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.
தற்காலிக ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்றுனர்கள் உள்ளிட்டோரை வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன.
தமிழகம் முழுதும் நேற்று 2779 பள்ளிகள் இயங்கவில்லை.
தமிழகம் முழுதும் உள்ள 1.21 லட்சம் ஆசிரியர்களில் 53,166 ஆசிரியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 5138 பேர் பல்வேறு விடுப்புகளை எடுத்திருந்தனர்.