ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் சாலை அமைக்கும் பணி நிறுத்தம்: அரசு தரப்பில் உத்தரவாதம்
ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் சாலை அமைக்கும் பணி நிறுத்தம்: அரசு தரப்பில் உத்தரவாதம்
ADDED : மார் 09, 2025 12:41 AM

சென்னை: 'ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக, புதிய சாலை அமைக்கும் பணி உடனே நிறுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
கோவையில் உள்ள ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு, 49 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஜனவரி 12ம் தேதி, புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தடை விதிக்கக் கோரி, திருப்பூரை சேர்ந்த கவுதம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனு விபரம்:
ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில், கான்கிரீட் சாலை உள்ள நிலையில், புதிய சாலை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், விலங்குகளை வேட்டையாடவும், மரங்களை வெட்டி கடத்தவும் வாய்ப்புள்ளது.
வாகன போக்குவரத்து அதிகரித்து, உணவு தேடி செல்லும் விலங்குகளின் உயிருக்கு ஆபத்தாகும். புதிய சாலையால், நீர் வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால், சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், புதிதாக அமைக்கப்பட உள்ள சாலையால், விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்க, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம், 'குறிப்பிட்ட அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி விட்டன' என்றார்.
இதையடுத்து, சாலை பணிகளை உடனே நிறுத்தும்படி அறிவுறுத்துவதாக, அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும், 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.