'அதிக மழையை கடவுள் தருகிறார் சேமிக்கும் திறன் அரசுக்கு இல்லை'
'அதிக மழையை கடவுள் தருகிறார் சேமிக்கும் திறன் அரசுக்கு இல்லை'
ADDED : மே 02, 2024 02:56 AM
சென்னை:''கோடை காலத்தில் நீர் நிலைகளை துார் வாரி, மழைக் காலத்தில் மழை நீரை முழுமையாக சேமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
கர்நாடக அரசிடம், காவிரியில் தண்ணீர் கேட்பது, கோடை காலத்தில் தண்ணீர் இல்லை என்பது, ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. டிசம்பர் மாதம் எத்தனை மாவட்டங்களில் வெள்ளம் வந்தது! ஒரு புறம் அதிக மழையை கடவுள் தருகிறார்; அந்த தண்ணீரை சேமிக்கும் திறன், தொலைநோக்கு பார்வை அரசுக்கு இல்லை.
தண்ணீர் வரும்போது வீணாக கடலில் கலக்க விடுகின்றனர். அடுத்த மூன்று மாதங்களில் கோடை காலம் வருவது, அனைவருக்கும் தெரியும். அப்போது தண்ணீர் இல்லை என்கின்றனர். இது தொடர் கதையாக உள்ளது.
காவிரியில் தண்ணீர் தர வேண்டியது, கர்நாடக அரசின் கடமை. நம் உரிமையை பெற வேண்டும். அதேநேரம் ஒவ்வொரு ஆண்டும் ஏன் அவர்களிடம் தண்ணீர் கேட்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் மழை நீரை நிர்வகிக்கும் திறன், ஆட்சியாளர்களுக்கு இல்லை.
கோடை காலத்தில், ஏரி, குளம், ஆற்றை துார் வாரி, மழைக் காலத்தில் நீரை சேமிக்க வேண்டும். நல்ல தண்ணீரை வீணாக கடலில் கலக்க வைக்கின்றனர். பின், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து, உப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்றுவதாகக் கூறுகின்றனர்.
ஒவ்வொரு முறையும், அரசியல் செய்வதற்காக, கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்கின்றனர். அங்குள்ள கட்சிகளும் அதை வைத்து அரசியல் செய்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த மழைக்கு அரசு எப்படி தயாராகிறது என்பதை, அரசு கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

