ADDED : மார் 01, 2025 01:51 AM
சென்னை: சென்னை மாநகராட்சி தற்போது 15 மண்டலங்களில், 200 வார்டுகளைக் கொண்டுள்ளது. மாநகராட்சி எல்லைகளுக்குள், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும், சட்டசபை தொகுதிகளின் எல்லைகளும், தற்போது ஒருசேர அமையவில்லை. இதன் காரணமாக, பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில், தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளை கருத்தில் வைத்து, சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை, மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை, அமைச்சர் நேரு, கடந்த 2022 ஏப்., 7ல் வெளியிட்டார். சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கு இடையே, தற்போது மக்கள் தொகை, மக்கள் தொகை அடர்த்தி, பரப்பளவு ஆகியவை, ஒரே சீராக அமையவில்லை. இது, பல்வேறு நிர்வாக இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது.
சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும், அடிப்படை வசதிகளை சீராக வழங்க வசதியாக, மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாகப் பகுதிகளை சீரமைத்து, மண்டலங்களின் எண்ணிக்கையை, 15ல் இருந்து, 20 ஆக உயர்த்தி, முதல்வர் உத்தரவிட்டுஉள்ளார்.