'போக்சோ' வழக்குகள் படிநிலை தெரியப்படுத்த டி.ஜி.பி.,க்கு அரசு கடிதம்
'போக்சோ' வழக்குகள் படிநிலை தெரியப்படுத்த டி.ஜி.பி.,க்கு அரசு கடிதம்
ADDED : மார் 09, 2025 02:26 AM
சென்னை: 'போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விடுதலையை எதிர்த்து, உரிய சட்ட கருத்துரை பெற்று மேல்முறையீடு செய்ய, புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்' என டி.ஜி.பி.,க்கு, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தி உள்ளார்.
தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
நீதிமன்றம் விடுதலை
சமீபத்தில் வழக்கு ஒன்றில், 'போக்சோ' சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்து, ஐ.பி.சி., என்ற, இந்திய தண்டனை சட்டத்தின் கீழுள்ள குற்றங்களுக்காக மட்டுமே, குறைந்தபட்ச சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இந்த தண்டனையையும் எதிர்த்து, குற்றவாளி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
போக்சோ குற்றங்களில் இருந்து குற்றவாளியை விடுதலை செய்ததில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, இதில் அரசு மேல்முறையீடு செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு குற்றவியல் வழக்கறிஞர்களிடம் கேட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, போக்சோ சிறப்பு சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளில், விசாரணை நீதிமன்றம் ஒரு குற்றவாளியை விடுதலை செய்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி மற்றும் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சட்ட ஆலோசனை
மேலும், அந்த வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும், தீர்ப்பின் விபரத்தை மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வழக்குகளில் மேல் முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என, சட்ட ஆலோசனை பெற்று, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள், சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தி, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.