5 ஆண்டுகளாக அறிவியல் ஆய்வகம் இல்லாத நிலை அமைச்சரிடம் மனு அளித்த அரசுப் பள்ளி மாணவியர்
5 ஆண்டுகளாக அறிவியல் ஆய்வகம் இல்லாத நிலை அமைச்சரிடம் மனு அளித்த அரசுப் பள்ளி மாணவியர்
ADDED : செப் 04, 2024 08:22 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 82 மாணவ-மாணவியருக்கு சைக்கிள் வழங்கினார்.
அவர் பேசும்போது, மாணவியர் எதற்கும் பயப்படக்கூடாது, ஏதாவது பிரச்னை என்றால் அவசர கால எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும், உங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கிறது என தெரிவித்தார். நிகழ்ச்சி முடியும் போது, மாணவியர் சிலர் சக மாணவியர் கையெழுத்திட்ட ஒரு மனுவை அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கினர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த கல்வியாண்டில் 570 மாணவ, மாணவியர் படித்து வருகிறோம். பள்ளியில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட அறிவியல் ஆய்வகம் கடந்த 2019 ல் இடிக்கப்பட்டது. புதிய ஆய்வகம் கட்டுவதற்கு ராஜியசபா எம்.பி., ரெங்கராஜன் 30 லட்சம் ரூபாய் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கினார்.
கொரோனா தொற்று நிவாரணத்துக்காக அந்தத் தொகை திரும்பப் பெறப்பட்டதால் தற்போது வரை அறிவியல் ஆய்வகம் இல்லாத நிலை இருந்து வருகிறது. கூடுதல் வகுப்பறை இல்லமாலும் சிரமப்பட்டு வருகிறோம், அறிவியல் ஆய்வகம் கட்டுவதற்கும், 7 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அரசுப் பள்ளி மாணவியர் திடீரென அளித்த மனுவை சற்றும் எதிர்பாரமல் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கீதாஜீவன், சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.