'ராஜாஜி, தினமலர் ராமசுப்பையருக்கு அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும்'
'ராஜாஜி, தினமலர் ராமசுப்பையருக்கு அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும்'
ADDED : மார் 29, 2024 12:22 AM
ஓசூர்:''ராஜாஜி, தினமலர் நிறுவனர் டி.வி. ராம சுப்பையர் இருவருக்கும் அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும்,'' என, அறவோர் முன்னேற்ற கழக கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி வேட்பாளர் சுவாமிநாதன் கூறினார்.
தென்சென்னை, ஸ்ரீபெரும்புதுார், சேலம், கிருஷ்ணகிரி, துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய, 6 லோக்சபா தொகுதிகளில் அறவோர் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. கிருஷ்ணகிரி தொகுதியில், வைரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுவாமிநாதன், ஓசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிற மொழிகளில் உள்ள நுால்கள் தமிழ் மொழியில் கொண்டு வரப்படும். போலீசாருக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு தரப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என்பன போன்ற, 108 தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்துள்ளோம். நீட் தேர்வுக்கு பள்ளிகளில் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும். பிராமணர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு இலவச காப்பீட்டு திட்டம் வழங்கப்படும். அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியாக கிளினிக் வைப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமலர் நிறுவனர் டி.வி.ராம சுப்பையர், ராஜாஜிக்கு அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும். பாரதியார் பிறந்த தினத்தை மாநில விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அறவோர் முன்னேற்ற கழகம் மூலம், இலவச சட்ட ஆலோசனை மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

