ADDED : மே 06, 2024 12:35 AM
சென்னை: 'தமிழகத்தில் மின்வெட்டு தொடரும் நிலையில், அதைத்தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது. மின் அழுத்த குறைவால், வீடுகளில் உள்ள குளிரூட்டிகள், மின் விசிறி போன்றவற்றை இயக்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். முதியோரும், குழந்தைகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்ச மின் தேவை, 19,693 மெகாவாட். இதில், மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி, 4,332 மெகாவாட் தான். மொத்த மின்தேவையில், ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே, தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேநிலை நீடித்தால், மின்சார உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற முடியாது; மின்வெட்டு தொடர்கதையாகும்.
தமிழகத்தில், 17,970 மெகாவாட் அனல் மின்திட்டங்களை, அடுத்த, 10 ஆண்டுகளில் செயல்படுத்த போவதாக தமிழக அரசு அறிவித்தது; அதிலும், முன்னேற்றம் இல்லை. நிலுவையில் உள்ள மின்திட்டங்களை விரைவாக செயல்படுத்தி, மாநில மின் தொகுப்பில் சேர்க்க வேண்டும். அதன் வாயிலாக மின்வெட்டைத் தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.