மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசை வலியுறுத்துவேன்: ராமேஸ்வரத்தில் கவர்னர் ரவி உறுதி
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசை வலியுறுத்துவேன்: ராமேஸ்வரத்தில் கவர்னர் ரவி உறுதி
ADDED : மார் 03, 2025 06:38 AM

-''தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்துவேன்,'' என, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்களிடம் கவர்னர் ரவி உறுதி அளித்தார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி, மூன்றாம் நாளான நேற்று, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் வந்த கவர்னர் ரவி, போராட்டம் நடத்திய மீனவர்களை சந்தித்தார். அப்போது, கவர்னரிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.
பின், மீனவர்கள் மத்தியில் கவர்னர் ரவி பேசுகையில், ''தமிழக மீனவர்களான உங்களின் துயரத்தை நன்றாக அறிவேன். இலங்கை கடற்படையினரால், மீனவர்கள் மற்றும் படகுகள் சிறை பிடிப்பு சம்பவம், இருநாட்டு பிரச்னையாக உள்ளது.
''இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்துவேன்,'' என்றார்.
தொடர்ந்து, ராமேஸ்வரம் செம்மமடத்தில், கவர்னர் ரவியின் சொந்த நிதி, 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட மனநோயாளி கள் காப்பகத்தை திறந்து வைத்து, அவர் பேசியதாவது:
வெவ்வேறு மொழிகள் பேசும், நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறோம். மனித குலத்தில் பிறந்த நம் அனைவரிடமும் இரக்க குணமும் உண்டு.
அதுதான் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாகும். எல்லாவற்றிலும் அரசை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடாது. இந்தியாவில், 50 லட்சம் பேர் மனநோயால் பாதித்து உள்ளனர்.
அவர்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும். இங்கு காப்பகம் திறக்க உறுதுணையாக இருந்த அனைவரையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
--- நமது நிருபர் -